தேவாரம் - ஆண்டானை அடியேனை - கொடிய நோய்கள், தீவினைகள், நவக்கிரக தோஷங்கள் அகல 48 நாட்கள் கேட்க படிக்க
பக்திசை
0:00 / 0:00
தேவாரம் - ஆண்டானை அடியேனை - கொடிய நோய்கள், தீவினைகள், நவக்கிரக தோஷங்கள் அகல 48 நாட்கள் கேட்க படிக்க
7 837 просмотров · 5 лет назад
பக்திசை
2,44 тыс. подписчиков
7 837 просмотров · 5 лет назад
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ வைத்திய நாதர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ தையல் நாயகி
திருமுறை : ஆறாம் திருமுறை 54 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருநாவுக்கரச சுவாமிகள்
தேவார காலத்தில் புள்ளிருக்குவேளூர் என்ற பெயருடனும், இன்று வைத்தீஸ்வரன் கோவில் என்றும் விளங்கும் இவ்வாலயம் காவிரியின் வடகரையிலுள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் மிகச் சிறப்பு பெற்ற ஒரு பிரார்த்தனைத் தலமாகும். சடாயு என்னும் புள் (பறவை), ரிக்வேதம், முருகவேள், சூரியனாம் ஊர் ஆகிய நால்வரும் இறைவனைப் பூஜித்த தலம் என்பதால் புள்ளிருக்குவேளூர் என்ற பெயர் வந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
பிறவிப் பிணியைப் போக்கும் சிவபெருமான் இக்கோவிலில் வைத்திய நாதர் என்ற பெயருடன், மக்களின் உடல் பிணிகளையும் போக்குகிறார். இத்தலத்திலுள்ள இறைவன் வைத்திய நாதரையும் இறைவி தையல் நாயகியையும் வேண்டி தொழுதால், எல்லாவகை வியாதிகளும் தீர்ந்துபோகும் என்று பக்தர்கள் நம்புகின்றனர். இக்கோவிலில் கிடைக்கும் திருச்சாந்து உருண்டையை உண்டால் எல்லாவகை நோய்களும் தீரும் என்று கூறுவர்.
இறைவி தையல் நாயகியின் சந்நிதி தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவியின் சந்நிதிக்கு அருகில் இத்தலத்தின் முருகக் கடவுள் முத்துக்குமார சுவாமி என்ற பெயரில் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். அசுரன் சூரபத்மனின் மார்பைப் பிளக்க முருகப் பெருமான் வேல் பெற்ற தலம் இதுவாகும். குமரகுருபர சுவாமிகள் இத்தலத்து முத்துக்குமரா சுவாமியின் மீது பிள்ளைத்தமிழ் பாடியுள்ளார். அருணகிரியாரும் இத்தலத்து முருகனைப் பாடியுள்ளார். கார்த்திகை தினத்தன்று முத்துக்குமாரசுவாமிக்கு விசேட பூஜைகள், சந்தன அபிஷேகம் முதலியன நடைபெறும். அர்த்தசாம பூஜையில் செல்வமுத்துக்குமார சுவாமிக்கு வழிபாடு நடந்த பிறகே சுவாமிக்கு வழிபாடு நடைபெறும்.
கோவிலின் தெற்குப் பிரகாரத்தில் சடாயு குண்டம் என்ற இடமுள்ளது. சடாயு இராவணனுடன் போர் புரிந்து மாண்ட ஊர் இது எனவும் அந்த சடாயுவிற்கு இராமனும் லட்சுமணனும் இத்தலத்தில் தினச் சடங்குகளைச் செய்தனர் என்றும் புராணங்கள் கூறுகின்றன. இங்குள்ள சடாயு குண்டத்தில் என்றும் சாம்பல் இருந்துகொண்டே இருக்கும். இச்சாம்பலை இட்டுக் கொள்வதால் வியாதிகள் நீங்கும் என்பதும் ஐதீகம்.
வடக்குப் பிரகாரத்தில் பத்திரகாளியம்மன் சந்நிதி உள்ளது.
சடாயு, வேதம், முருகன், சூரியன், அங்காரகன், பாரம்மா, இராமர், சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை, பராசர முனிவர், துர்வாச முனிவர் ஆகியோர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளனர். இத்தலம் நவக்கிரக ஸ்தலங்களில் அங்காரகனுக்கு (செவ்வாய்) உரிய தலமாகும். செவ்வாய் இத்தலத்தில் மூலவர் வைத்தியநாதரை வழிபட்டு தனக்கு ஏற்பட்ட வியாதி நீங்கப் பெற்றார். இவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உண்டு. செவ்வாய்க் கிழமைகளில் ஆட்டு வாகனத்தில் அங்காரக மூர்த்தி எழுந்தருள்வார். செவ்வாய் தோஷ பரிகாரத்தலம் என்பதால் பக்தர்கள் பெருமளவில் இத்தலத்திற்கு வருகை தருகின்றனர்.
இத்தலம் ஒரு கோளிலித் தலம். இத்தலத்தில் நவகிரங்களுக்கு வலிமை இல்லை. நவகிரகங்கள் மூலவர் வைத்தியநாதசுவாமி கருவறைக்குப் பின்புறம் ஒரே வரிசையில் தங்களுக்கு உரிய வாகனம், ஆயுதம் இல்லாமல் நிற்கின்றனர். இத்தலத்தில் மூலவரை வணங்கினால் நவக்கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம். தினந்தோறும் ஆறு கால பூஜை நடைபெறுகிறது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் ஆட்டு வாகனத்தில் அங்காரக மூர்த்தி எழுந்தருளுவார்.
சிதம்பரம் - மயிலாடுதுறை இரயில் பாதையில் உள்ள நிலையம். இரயில் நிலையத்திலிருந்து 1கி.மீ. தூரத்தில் கோவில் உள்ளது. சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை ஆகிய இடங்களிருந்து பேருந்து வசதி உள்ளது.
பொருளுரை :
1. அடியேனை அடிமையாகக் கொண்டு ஆண்டவனாய், திருமாலும் பிரமனும் அடியையும் முடியையும் அறியா வண்ணம் அனற்பிழம்பாய் நீண்டவனாய், நெடுங்களக் கோயிலில் உறைவானாய், சக்கரப்படையால் பேராற்றலுடைய சலந்தரனுடைய மார்பினைப் பிளந்தவனாய், கேதாரத்தில் உறைவோனாய், ஒரு காலத்தும் அழிதல் இல்லாதவனாய், ஒளி வீசும் புள்ளிகளை உடைய பாம்போடு எலும்பினை அணிகலனாகப் பூண்டவனாகிய புள்ளிருக்கு வேளூர்ப் பெருமானைத் துதிக்காமல் பல நாள்களை வீணாகக் கழித்து விட்டேனே.
2. அடியேனுடைய உள்ளத்தில் சிறப்பாகக் கிட்டினவனாய் விளங்குகின்ற சிவனாகிய தேவதேவனாய், மிக நுண்ணியனாய், கொடிய நீண்ட வேலை ஏந்தி வந்த கூற்றுவனைத் திருவடியால் உதைத்து, முனிவனாகிய மார்க்கண்டேயன் கொண்ட யம பயத்தைப் போக்கியவனாய், பிறப்பு இறப்பு இல்லாத தலைவனாய், யானைத் தோலை விரும்பிப் போர்த்தவனாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.
3. அடியேன் பக்தியோடு வணங்கித் தன்னைப் பலநாளும் பாமாலைகளால் போற்றுமாறு பழக்கியவனாய், எல்லாத்தெய்வங்களும் துதிக்கும் தெய்வமாய், என் தலைவனாய், என் உள்ளத்து ஊறும் தேன் அமுதம் பசுப்பால், இனிய கரும்பு என்பன போன்று இனியனாய்ப் பகைவரை அழிப்பவனாய், ஆதிக் கடவுளாய் உள்ள புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாமல் ஆற்ற நாள் போக்கினேனே.
4. என் இருண்ட உள்ளத்திலுள்ள அஞ்ஞானத்தைப் போக்க அறிவற்ற என் துயரங்களையும் தீவினைகளையும் போக்கி, நான் கடைத்தேறுமாறு என் தெளிவற்ற மனத்தில் தெளிவு பிறப்பித்து, தன்னைப் போலச் சிவலோகத்தின் வழியை அறியும் உள்ளத்தை வழங்கிய அருளாளனாய், தொடக்கத்திலிருந்தே பெரிய தவத்தில் நிலைபெற்றிருப்பவனாய், நான்கு வேதங்கள் ஆறு அங்கங்கள் இவற்றிற்கு அப்பாற்பட்ட பொருளாய் உள்ள புள்ளிருக்கு வேளூ ரானைப் போற்றாமல் ஆற்ற நாள் போக்கினேனே.
5. மின்னல் போன்று பிரகாசிக்கும் உருவினனாய், வானத்தில் ஒலி என்ற ஒரே பண்பாய், வீசும் காற்றில் ஒலி ஊறு என்ற இருபண்புகளாய், சிவந்த நெருப்பில் ஒளி, ஊறு, ஒலி என்ற முப்பண்புகளாய், பள்ளம் நோக்கிச் செல்லும் நீரில் சுவை, ஒளி, ஊறு, ஒலி என்ற நான்கு பண்புகளாய், நிலத்தில் நாற்றம், சுவை, ஒளி, ஊறு, ஒலி என்ற ஐந்து பண்புகளாய்க் குறையாத புகலிடமாக நிலைபெற்ற பொருளாய், பவளக் கொழுந்தாய், முத்தாய், வளர் ஒளியாய், வயிரமாய், பொன்போலும் நிறமுடைய புள்ளிருக்கு வேளூரானைப் போற்றாதே ஆற்ற நாள் போக்கினேனே.