திருக்கண்டியூர் வீரட்டம் | வினவினேன் அறியாமையில் உரை செய்ம்மின் | திருஞானசம்பந்தர் தேவாரம்
Shaivamum Thamizhum
0:00 / 0:00
திருக்கண்டியூர் வீரட்டம் | வினவினேன் அறியாமையில் உரை செய்ம்மின் | திருஞானசம்பந்தர் தேவாரம்
235 просмотров · 3 нед. назад
Shaivamum Thamizhum
3,48 тыс. подписчиков
235 просмотров · 3 нед. назад
03.038 திருக்கண்டியூர் வீரட்டம் | வினவினேன் அறியாமையில் உரை செய்ம்மின் | திருஞானசம்பந்தர் தேவாரம்
Join To Support.....👇👇👇👇👇
/ @shaivamumthamizhum
#BrahmaSiraKandeeswararTemple | #ThiruKandiyur | #ShivamumThamizhum
திருக்கண்டியூர் சிவபெருமானின் அட்டவீரட்டத் தலங்களில் ஒன்றாகும். பார்வதிதேவியின் வேண்டுகோளுக்கு இணங்க சிவபெருமான் பிரம்மாவின் 5 தலைகளுள் ஒன்றைக் கிள்ளி எடுத்த தலம் என்றதால் இத்தலம் கண்டியூர் வீரட்டம் என ஆயிற்று.
சாதாதாப என்ற முனிவருக்காக இறைவனால் வில்வமரம் கயிலையிலிருந்து கொண்டு வரப்பட்டதால் இத்தலத்திற்கு ஆதி வில்வாரண்யம் என்றும் பெயருண்டு. இம்முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. அப்போது இறைவன், அவருக்குக் காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு. சாதாதாப முனிவருக்கு இத்தலத்தில் தனி சந்நிதி உள்ளது. பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும் திருக்கண்டியூர் சொல்லப்படுகிறது. பிரம்மாவின் தலையைக் கிள்ளியதால் ஈசனுக்கு ஏற்பட்ட பிரமஹத்தி தோஷம் இத்தலத்தில் மஹாவிஷ்ணுவால் நீங்கியது.
இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ பிரம்ம சிரகண்டீஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ மங்கள நாயகி
இந்த பதிகத்தின் பாடல்கள் வினா உரை பாணியில் அமைந்துள்ளன. பெருமானின் தன்மைகளை அறிந்து கொள்ளும் விருப்பத்துடன் சில வினாக்களை எழுப்பி, தலத்தில் இருந்த அடியார்களிடம் விளக்கம் கேட்கும் விதத்தில் அமைந்த பாடல்கள் என்பதால், ஞானசம்பந்தர் இந்த பதிகத்தினை வினாவுரைப் பதிகம் என்று குறிப்பிடுகின்றார்.
வினவினேன் அறியாமையில் உரை
செய்ம்மின் நீர் அருள் வேண்டுவீர்
கனைவிலார் புனல் காவிரிக்கரை
மேய கண்டியூர் வீரட்டன்
தனம் முனே தனக்கு இன்மையோ தமர்
ஆயினார் அண்டம் ஆளத்தான்
வனனில் வாழ்க்கை கொண்டாடிப் பாடி
இவ்வையமாப் பலி தேர்ந்ததே. ..... (01)
உள்ளவாறு எனக்கு உரை செய்ம்மின்
உயர்வாய மாதவம் பேணுவீர்
கள்ளவிழ் பொழில் சூழும் கண்டியூர்
வீரட்டத்து உறை காதலான்
பிள்ளை வான்பிறை செஞ்சடைம் மிசை
வைத்ததும் பெரு நீரொலி
வெள்ளம் தாங்கியது என்கொலோ மிகு
மங்கையாள் உடன் ஆகவே. ..... (02)
அடியர் ஆயினீர் சொல்லுமின்
அறிகின்றிலேன் அரன் செய்கையை
படியெலாம் தொழுது ஏத்து கண்டியூர்
வீரட்டத்து உறை பான்மையான்
முடிவுமாய் முதலாய் இவ்வையம்
முழுதுமாய் அழகாயதோர்
பொடியதார் திருமார்பினில்
புரிநூலும் பூண்டு எழு பொற்பதே. ..... (03)
பழைய தொண்டர்கள் பகருமின்
பலவாய வேதியன் பான்மையை
கழை உலாம் புனல் மல்கு காவிரி
மன்னு கண்டியூர் வீரட்டன்
குழையொர் காதினில் பெய்து உகந்து
ஒரு குன்றின் மங்கை வெருவுறப்
புழை நெடுங்கை நன்மா உரித்து
அது போர்த்து உகந்த பொலிவதே. ..... (04)
விரவிலாது உமைக் கேட்கின்றேன்
அடி விரும்பி ஆட்செய்வீர் விளம்புமின்
கரையெலாம் திரை மண்டு காவிரிக்
கண்டியூர் உறை வீரட்டன்
முரவம் மொந்தை முழா ஒலிக்க
முழங்கு பேயொடும் கூடிப் போய்
பரவு வானவர்க்காக வார்கடல்
நஞ்சம் உண்ட பரிசதே. ..... (05)
இயலுமாறு எனக்கு இயம்புமின்
இறைவன்னுமாய் நிறை செய்கையை
கயல் நெடுங்கண்ணினார்கள் தாம்பொலி
கண்டியூர் உறை வீரட்டன்
புயல் பொழிந்திழி வானுளோர்களுக்காக
அன்று அயன் பொய்ச்சிரம்
அயனகவ் அது அரிந்து மற்றதில்
ஊன் உகந்த அருத்தியே. ..... (06)
திருந்து தொண்டர்கள் செப்புமின் மிகச்
செல்வன் தன்னது திறமெலாம்
கருந்தடங் கண்ணினார்கள் தாம் தொழு
கண்டியூர் உறை வீரட்டன்
இருந்து நால்வரொடு ஆல்நிழல் அறம்
உரைத்ததும் மிகு வெம்மையார்
வருந்த வன்சிலையால் அம்மாமதில்
மூன்றும் மாட்டிய வண்ணமே. ..... (07)
நா விரித்து அரன் தொல்புகழ் பல
பேணுவீர் இறை நல்குமின்
காவிரித் தடம் புனல் செய் கண்டியூர்
வீரட்டத்து உறை கண்ணுதல்
கோவிரிப் பயன் ஆன் அஞ்சு ஆடிய
கொள்கையும் கொடி வரை பெற
மாவரைத் தலத்தால் அரக்கனை
வலியை வாட்டிய மாண்பதே. ..... (08)
பெருமையே சரணாக வாழ்வுறு
மாந்தர்காள் இறை பேசுமின்
கருமையார் பொழில் சூழும் தண்வயல்
கண்டியூர் உறை வீரட்டன்
ஒருமையால் உயர் மாலும் மற்றை
மலரவன் உணர்ந்து ஏத்தவே
அருமையால் அவருக்கு உயர்ந்து
எரியாகி நின்ற அத்தன்மையே. ..... (09)
நமர் எழு பிறப்பு அறுக்கும் மாந்தர்கள்
நவிலுமின் உமைக் கேட்கின்றேன்
கமர் அழி வயல் சூழும் தண்புனல்
கண்டியூர் உறை வீரட்டன்
தமர் அழிந்து எழு சாக்கியச் சமண்
ஆதர் ஓது மதுகொள
அமரர் ஆனவர் ஏத்த அந்தகன்
தன்னைச் சூலத்தில் ஆய்ந்ததே. ..... (10)
கருத்தனை பொழில் சூழும் கண்டியூர்
வீரட்டத்து உறை கள்வனை
அருத்தனை திறம் அடியர்பால் மிகக்
கேட்டு உகந்த வினா உரை
திருத்தமாம் திகழ் காழி ஞானசம்பந்தன்
செப்பிய செந்தமிழ்
ஒருத்தர் ஆகிலும் பலர்கள் ஆகிலும்
உரைசெய்வார் உயர்ந்தார்களே. ..... (11)
பதிகப் பலன் : அன்பர்தம் கருத்தாக விளங்குபவனாய், சோலைகள் சூழ்ந்த திருக்கண்டியூர் வீரட்டானத்தில் பிறரால் காணப்பெறாது மறைந்திருந்து மனத்தைக் கவரும் கள்வனாய், சொல்லின் பொருளாக இருக்கும், அப்பெருமானின் திறத்தினை அடியவர்களிடம் வினா உரையாகக் கேட்டு மகிழும் முறையில் சீகாழியில் அவதரித்த, இறைவனின் இயல்புகளை நன்கு உணர்ந்த ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஒருவராகத் தனித்தும், பலராகச் சேர்ந்தும் ஓதவல்லவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர்.
ஆலய முகவரி : அருள்மிகு பிரம்ம சிரகண்டீஸ்வரர் கோவில், திருக்கண்டியூர், திருக்கண்டியூர் அஞ்சல், (வழி) திருவையாறு, தஞ்சை மாவட்டம், PIN - 613 202
குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம்.
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"