Перейти к содержимому

திருக்கடவூர் வீரட்டம்(திருக்கடையூர்) | பொடியார் மேனியனே புரிநூல் ஒருபால் பொருந்த | சுந்தரர் தேவாரம்

Shaivamum Thamizhum

0:00 / 0:00

திருக்கடவூர் வீரட்டம்(திருக்கடையூர்) | பொடியார் மேனியனே புரிநூல் ஒருபால் பொருந்த | சுந்தரர் தேவாரம்

2 101 просмотр · 1 год назад
Shaivamum Thamizhum
3,47 тыс. подписчиков
2 101 просмотр · 1 год назад
07.028 திருக்கடவூர் வீரட்டம்(திருக்கடையூர்) | பொடியார் மேனியனே புரிநூல் ஒருபால் பொருந்த | சுந்தரர் தேவாரம் | கரூர் சுவாமிநாதன் | ‪@ShaivamumThamizhum‬ எமபயம் நீக்கும் தலங்கள் திருக்கடையூர், திருவீழிமிழலை, திருவையாறு, திருவெண்காடு, திருவைகாவூர், திருவாஞ்சியம் ஆகியவை ஆகும். இவற்றுள் திருக்கடையூர் மிகவும் பிரசித்தி பெற்ற தலம். இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அபிராமி மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க மிருகண்டு தமபதியினர் 16 வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர். மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயருக்கு கூறினர். சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் போது திருக்கடவூர் வந்து சேர்ந்தார். அவர் திருக்கடவூர் தலம் வந்தபோது அவருடைய ஆயுள் முடியும் நாள் நெருங்கியது. எமன் தன் பணியை முடிக்கும் பொருட்டு பாசக்கயிற்றை மார்க்கண்டேயர் மீது வீசினான். எமனைக் கண்டு அச்சமுற்ற மார்க்கண்டேயர் தான் வழிபட்டுக் கொண்டிருந்த லிங்கத்தை ஆரத் தழுவிக் கொண்டார். எமனும் பாசக்கயிற்றை லிங்கத்தையும் சேர்த்து வீசினான். இறைவன் சிவபெருமான் தன்னுடைய பக்தனைக் காப்பாற்ற லிங்கத்திலிருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு காலனைக் சூலாயுத்தால் கொன்று காலனுக்குக் காலனாக காலசம்ஹார மூர்த்தியாக விளங்கினார். பின்பு பூதேவி, பிரம்மா, மஹாவிஷ்னு ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்கி எமனை உயிர்ப்பித்து அருள் புரிந்தார் என்று தல புராணம் கூறுகிறது. சிவபெருமானின் எட்டு வீரச் செயல்களுள் காலனை கடிந்த இந்த வீரச் செயலும் ஒன்று. எல்லோரும் மார்க்கண்டேயனைப் போல் என்றும் 16 வயதுடன் மரணத்தில் இருந்து தப்ப முடியாது. இருப்பினும் நாம் எதிர்கொள்ளும் மரணம் துன்பத்தைத் தராமல் இருக்க இத்தலத்து இறைவனை வணங்கி வழிபட்டு நலம் பெறுவோம். 00:11 பொடியார் மேனியனே புரிநூல் ஒருபால் பொருந்த வடியார் மூவிலைவேல் வளர் அங்கையின் மங்கையொடும் கடியார் கொன்றையனே கடவூர் தனுள் வீரட்டத்து எம் அடிகேள் என் அமுதே எனக்கு ஆர் துணை நீ அலதே. ..... (01) 03:57 பிறையாரும் சடையாய் பிரமன் தலையில் பலிகொள் மறையார் வானவனே மறையின் பொருள் ஆனவனே கறையாரும் மிடற்றாய் கடவூர் தனுள் வீரட்டத்து எம் இறைவா என் அமுதே எனக்கு ஆர் துணை நீ அலதே. ..... (02) 07:28 அன்று ஆலின் நிழல் கீழ் அறம் நால்வர்க்கு அருள்புரிந்து கொன்றாய் காலன் உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு மான் கன்றாரும் கரவா கடவூர்த் திருவீரட்டத்துள் என் தாதை பெருமான் எனக்கு ஆர் துணை நீ அலதே. ..... (03) 09:01 போராரும் கரியின் உரி போர்த்துப் பொன்மேனியின் மேல் வாராரும் முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே காராரும் மிடற்றாய் கடவூர் தனுள் வீரட்டானத்து ஆரா என் அமுதே எனக்கு ஆர் துணை நீ அலதே. ..... (04) 10:36 மையார் கண்டத்தினாய் மதமா உரி போர்த்தவனே பொய்யாது என் உயிருள் புகுந்தாய் இன்னம் போந்து அறியாய் கையார் ஆடு அரவா கடவூர் தனுள் வீரட்டத்து எம் ஐயா என் அமுதே எனக்கு ஆர் துணை நீ அலதே. ..... (05) 12:53 மண் நீர் தீ வெளி கால் வரு பூதங்களாகி மற்றும் பெண்ணோடு ஆண் அலியாய் பிறவா உரு ஆனவனே கண்ணாரும் மணியே கடவூர் தனுள் வீரட்டத்து எம் அண்ணா என் அமுதே எனக்கு ஆர் துணை நீ அலதே. ..... (06) 14:36 எரியார் புன்சடைமேல் இளநாகம் அணிந்தவனே நரியாரும் சுடலை நகு வெண்தலை கொண்டவனே கரியார் ஈர் உரியாய் கடவூர் தனுள் வீரட்டத்து எம் அரியாய் என் அமுதே எனக்கு ஆர் துணை நீ அலதே. ..... (07) 16:44 வேறா உன் அடியேன் விளங்கும் குழைக் காது உடையாய் தேறேன் உன்னை அல்லால் சிவனே என் செழுஞ்சுடரே காறார் வெண்மருப்பா கடவூர்த் திருவீரட்டத்துள் ஆறார் செஞ்சடையாய் எனக்கு ஆர் துணை நீ அலதே. ..... (08) 18:29 அயனோடு அன்று அரியும் அடியும் முடி காண்பரிய பயனே எம்பரனே பரமாய பரஞ்சுடரே கயமாரும் சடையாய் கடவூர்த் திருவீரட்டத்துள் அயனே என் அமுதே எனக்கு ஆர் துணை நீ அலதே. ..... (09) 20:24 காராரும் பொழில்சூழ் கடவூர்த் திருவீரட்டத்துள் ஏராரும் இறையைத் துணையா எழில் நாவலர்கோன் ஆரூரன் அடியான் அடித்தொண்டன் உரைத்த தமிழ் பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே. ..... (10) பதிகப் பலன் : மேகங்கள் தவழ்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்கடவூரின்கண் உள்ள "திருவீரட்டானம்" என்னும் கோயிலில் விளங்குதல் பொருந்திய இறைவனையே துணையாக விதந்து, அழகிய திருநாவலூரில் தோன்றியவனும், திருவாரூர்ப் பெருமானுக்கு அடிமையும் அப்பெருமான் அடிநிழலை நீங்காதிருந்து தொண்டு செய்பவனும் ஆகிய நம்பியாரூரன் பாடிய இத்தமிழ்ப் பாடல்களை நிலவுலகில் உள்ளவர் பாட வல்லாராயின், சிவலோகத்தில் இருத்தல் திண்ணம். ஆலய முகவரி : அருள்மிகு அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், திருக்கடையூர், மயிலாடுதுறை வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம், PIN - 609 311. குறிப்பு : இப்பதிகத்திற்கான சொற்பிரிவு எங்களது முயற்சியில் உருவாக்கப்பட்டுள்ளது. பிழை இருப்பின் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். "மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகம் எல்லாம்"